நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி நாகூர் நாயகம் நேசப்பாசறை அறக்கட்டளை சார்பில் மீலாதுந்நபி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஹாஜா சம்சுதீன் சாகிபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அபுசாலிஹ்சாகிபு, செயலாளர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முதலாவது நிகழ்ச்சியாக சிக்கல் வானவில் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது, இரண்டாவது நிகழ்ச்சியாக தஞ்சை பெரிய கோவில், வேளாக்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா ஆகிய முக்கிய வழிப்பாட்டுத்தலங்களில் கேக் வழங்கப்பட்டது, மூன்றாவது நிகழ்ச்சியாக நாகை சாமந்தான்பேட்டை அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் மற்றும் அனுபவம் மூத்த குடிமக்கள் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பாளர் முகமது உசேன் சாகிபு உட்பட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
